ஊடக சுதந்திரத்திற்கு எதிராக மீண்டும் தலைதூக்கி வரும் அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது : யாழ். ஊடக அமையம் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

ஊடக சுதந்திரத்திற்கு எதிராக மீண்டும் தலைதூக்கி வரும் அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது : யாழ். ஊடக அமையம் அறிக்கை

ஊடக சுதந்திரத்திற்கு எதிராக மீண்டும் தலைதூக்கி வரும் அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருவதாக யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத அரசாக இலங்கை இருந்து வருவதாக யாழ். ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் BBC ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்பின் மீதான ஊடக படுகொலை கலாசாரம் 39 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை காவு கொண்டு நிற்பதாக யாழ். ஊடக அமையம் நினைவுகூர்ந்துள்ளது.

நூற்றுக்கணக்கிலான ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியிலிருந்து விலகவும் நாட்டை விட்டு வெளியேறவும் இத்தகைய சூழலே காரணமானதாக அமையத்தின் நிர்வாகக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்கு கூட நீதி வழங்கப்படாத வரலாற்றை இலங்கை இன்று வரை கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சமூக ஊடக பதிவுகளுக்காக கைதானவர்கள் பிணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்க, மரணதண்டனை கைதிகள் பொதுமன்னிப்பில் வீடு திரும்பும் கதைகள் இலங்கையில் சாதாரணமாகியுள்ளதாகவும் யாழ். ஊடக அமையம் குறிப்பிட்டுள்ளது

‘ஊழலற்ற ஆட்சியமைப்பேன்’ என கதிரையேறிய தற்போதைய ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான வடக்கு ஆளுநர் வட மாகாண ஊழல்களை கண்டுகொள்ளாது வேடிக்கை பார்த்திருக்க, அதிகார மட்டமோ தம்மை காப்பாற்ற ஊழல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களை பலியாடாக்க பார்ப்பதாக அமையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் அரச மட்ட நிர்வாகத்தில் நடைபெறும் மோசடிகளை கூட வெளிக்கொணர்வதை அனுமதிக்காத சூழலில் ஊழலற்ற ஆட்சியமைப்பேன் என்பது வெறும் பேச்சாகவே இருந்துவிடப் போவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அளவில் சிரச, சக்தி போன்ற ஊடகங்கள் அச்சமான சூழலை எதிர்கொள்ள, யாழ்ப்பாணத்தில் புகைப்படங்களை செய்தி அறிக்கையிடலில் பயன்படுத்தியதற்காக, நாளிதழ்கள் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டியேற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க குரல் கொடுத்த முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இன்று வரை நீதி கிட்டியிருக்கவில்லை எனவும் யாழ். ஊடக அமையம் விசனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment