நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாளத்தின் புதிய பிரதமர் - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாளத்தின் புதிய பிரதமர்

நேபாளத்தின் புதிய பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆட்சியை இழந்தார். இரண்டாவது முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. 

எனவே, அவரது பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி  பித்யா தேவி பண்டாரி, பிரதிநிதிகள் சபையை கலைத்து, பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகளை அறிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமிக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, ஷெர் பகதூர் தேவ்பா (வயது 75) கடந்த 13ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், 249 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 

பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா வெற்றி பெற்றார்.   

No comments:

Post a Comment

Post Bottom Ad