குற்றத்தினை மறைக்க சிறுமி எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இஷாலினிக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..! - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

குற்றத்தினை மறைக்க சிறுமி எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இஷாலினிக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த இஷாலினிக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (22.07.2021) முன்னெடுக்கப்பட்டது.

நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள், நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் கொழும்பில் மரணமடைந்த இஷாலினி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் தீக்காயமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

இது ஒரு பாரிய குற்றமாக காணப்படுவதுடன் குறித்த குற்றத்தினை மறைப்பதற்காக சிறுமி எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரி நிற்கின்றோம்.

அதேபோன்று கிளிநொச்சி கல்மடுப்பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். அத்துடன் இணையத்தளங்களில் சிறுமிகள் விற்பனை போன்ற துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது எமக்கு கவலையளிக்கின்றது.

இதனால் நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது கேள்விக்குறியாகவுள்ளது. எனவே எமது நாட்டின் பெண்கள் சிறுவர்கள் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad