டெல்டா வகை வைரஸ் பரவலால் ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு 5 மடங்கு உயரும் - எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

டெல்டா வகை வைரஸ் பரவலால் ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு 5 மடங்கு உயரும் - எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர்கள்

டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பியாவில் ஆகஸ்ட் 1ஆம் திகதிக்குள் கொரோனா பாதிப்பு 5 மடங்கு உயரும் என்றும் ஐரோப்பிய யூனியன் நோய் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

உலகை கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா தொற்று பரவல் முதல் 6 மாதங்களுக்கு பிறகு குறைய தொடங்கியது.

ஆனால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இதனால் பல்வேறு நாடுகளில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது.

இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெல்டா வகை வைரஸ் இதுவரை 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. டெல்டா வகை வரைஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐரோப்பியா நாடுகளிலும் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் புதிதாக 51 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 31 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பெரும்பாலான நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்டா வகை வைரஸ்தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பியாவில் ஆகஸ்டு 1ஆம் திகதிக்குள் கொரோனா பாதிப்பு 5 மடங்கு உயரும் என்றும் ஐரோப்பிய யூனியன் நோய் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், வார அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்டா மாறுபாடு காரணமாக பல நாடுகளில் தற்போது கொரோனா தொற்று நோய் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்படுவதும், உயிரிழப்பதும் அதிகரிக்கலாம். சைப்ரஸ், கிரீஸ், லிதுவேனியா, லக்சம் பர்க், மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவேனியா, ஸ்பெயின் உட்பட 20 நாடுகளில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. 9 நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

ஆகஸ்ட் 1ஆம் திகதிக்குள் வார இறுதியில் 1 லட்சம் பேரில் 420 பேர் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு 1 லட்சம் மக்களில் 620 பேர் பாதிக்கப்படக் கூடும்.

கடந்த வாரம் 10 லட்சம் பேரில் 6.8 பேர் உயிரிழந்த விகிதம், வரும் வாரங்களில் 10 லட்சம் மக்களில் 10 பேர் உயிரிழக்கும் விகித நிலைமை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஒரு வார காலத்தில் ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad