நாளை ஆரம்பமாகிறது தன்னார்வ ரீதியில் இராணுவ தளங்களில் தடுப்பூசி : கொழும்பில் மாத்திரம் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஏனைய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு - News View

Breaking

Post Top Ad

Sunday, July 4, 2021

நாளை ஆரம்பமாகிறது தன்னார்வ ரீதியில் இராணுவ தளங்களில் தடுப்பூசி : கொழும்பில் மாத்திரம் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஏனைய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு

நாளை திங்கட்கிழமை (05) முதல் நாடு முழுவதும் ‘தன்னார்வ’ (Walk in) ரீதியில் சினோபார்ம் முதல் டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக, இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவ மருத்துவ பிரிவினால் புதிய சமூக தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்பட்டு இந்நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை (05) கொழும்பு மாவட்டத்தில் முற்பகல் 8.30 முதல் மாலை 4.30 மணி வரை 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலுள்ளவர்களுக்கு நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அமைக்கப்பட்ட புதிய சமூக தடுப்பூசி மையம், பத்தரமுல்ல தியத்த உயன, பனாகொட ஶ்ரீ போதிராஜராமய, வேரஹெரவை தளமாகக் கொண்ட 1ஆவது இலங்கை இராணுவ மருத்துவ படையணி, ஆகியவற்றில் நாளை (05) முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4.30 மணி வரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் கட்டாயமாக தங்களது வதிவிடத்தை உறுதி செய்யும் வகையில், தேசிய அடையாள அட்டை, மின்சாரம், நீர், தொலைபேசி பட்டியல், அல்லது தேர்தல் பட்டியலின் இடாப்பின் பிரதி அல்லது கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் சான்றிதழ் ஆகியவற்றை காண்பித்து அந்தந்த இடங்களில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, காலி வித்யாலோக வித்தியாலயம், மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம், தியத்தலாவ பாதுகாப்புப் படைத் தலைமையகம், அநுராதபுரம் இராணுவ மருத்துவமனை, மின்னேரியா காலாற்படை பயிற்சிப் பாடசாலை, கிளிநொச்சி இராணுவ மருத்துவமனை, முல்லைத்தீவு தமிழ் வித்தியாலயம் ஆகிய இடங்களில், 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்தந்த மையங்களில், தங்களது வசிப்பிடத்தை உறுதி செய்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad