புதிய திரிபுகளுடன் கொவிட் அபாயமும் அதிகரித்துள்ளது : பி.சி.ஆர். பரிசோதனைகள் குறைந்தமையே தொற்றாளர்கள் குறையக் காரணம் : 20 வீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவுள்ளனர் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

புதிய திரிபுகளுடன் கொவிட் அபாயமும் அதிகரித்துள்ளது : பி.சி.ஆர். பரிசோதனைகள் குறைந்தமையே தொற்றாளர்கள் குறையக் காரணம் : 20 வீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவுள்ளனர்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த காலங்களை விட தற்போது பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளமையே தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமைக்கான பிரதான காரணியாகும். பல்வேறு புதிய கொவிட் வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களும் அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் இனங்காணப்படும் தொற்றாளர்களில் 20 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுகின்றனர். இவ்வாறு ஒட்சிசன் தேவையுடையோரில் 20 சதவீதமானோர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடிய நிலையிலுமுள்ளனர். 

எனவே தற்போதைய ஆபத்தை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதோடு, கொவிட் தொற்றால் சுகாதார கட்டமைப்பு பாதிப்படையாமல் தவிர்ப்பதற்கு வீடுகளில் சிகிச்சையளிக்கும் முறைமையை சகல மாவட்டங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு கொவிட் வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலைமை தொடர்கின்ற போதிலும் சுகாதார அமைச்சினால் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நாளாந்தம் சுமார் 20,000 - 22,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 9,000 ஆகக் குறைவடைந்துள்ளது.

அதனடிப்படையில் அவதானிக்கும் போது கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் சதவீதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும். எனவே நாட்டில் கொவிட் பரவலால் ஏற்படக் கூடிய ஆபத்து குறைவடையவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது 202 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 90 பேர் ஒட்சிசன் தேவையுடையோராக உள்ளதோடு, 19 பேர் அதி தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 87 கொவிட் தொற்றாளர்களில் 34 பேர் ஒட்சிசன் தேவையுடையோராக உள்ளதோடு நால்வர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களில் 20 வீதமானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவுள்ளனர். அவர்களில் 20 வீதமானோர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடிய நிலையிலுள்ளனர். எனவே அதிகரித்துச் செல்லும் அபாயத்தை உணர்ந்து மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad