வெருகல் பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

வெருகல் பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வெருகல் பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

வெருகல் - ஈச்சிலம்பற்று பகுதியில் இந்த புதிய பொலிஸ் நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பிரசன்னத்துடன் திங்கட்கிழமை 21.06.2021 திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் பொலிஸ் பொதுமக்கள் உறவை வலுப்படுத்தி மக்களுக்கான சேவைகளை இலகுவாக்கும் வகையில் புதிய பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியை பொலிஸ் மா அதிபர் வழங்கியதையடுத்து இவ்வாறு புதிய பொலிஸ் நிலையங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகின்றன.

தற்போது திறக்கப்பட்டுள்ள வெருகல் பொலிஸ் நிலையத்தின் மூலம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெருகல் ஈச்சிலம்பற்று பூநகர் பூமரத்தடிச்சேனை கறுக்காமுனை இலங்கைத்துறை முகத்துவாரம் உப்பூறல் ஆனைத்தீவு வெருகல் முகத்துவாரம் சீனன்வெளி உள்ளிட்ட பிரதேச மக்கள் பொலிஸ் சேவைகளைப் பெறவுள்ளார்கள்.

இதுவரை காலமும் இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 4000 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சேருநுவர பொலிஸ் நிலையம் சென்றே சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

இதனால் போக்குவரத்து வசதியற்ற இந்தப் பிரதேசங்களின் உள்ளுர் கிராம மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad