நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட பணவீக்கத்தை 4 - 6 சதவீதத்திற்குள் பேண முடிந்தது : இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட பணவீக்கத்தை 4 - 6 சதவீதத்திற்குள் பேண முடிந்தது : இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்

(நா.தனுஜா)

நாடு தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிநிலைக்கு மத்தியில் சமூக பொருளாதார கட்டமைப்பின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சிறிய, நடுத்தர மற்றும் பெரியளவிலான வணிகங்களின் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்து வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட பணவீக்கத்தை 4 - 6 சதவீதத்திற்குள் பேண முடிந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தகப் பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டுப் பேரவை மாநாட்டில் கலந்துகொண்டு நாட்டின் பொருளாதாரநிலை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் நாட்டில் முதலீடுகள் இடம்பெறுவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட தாக்கங்கள் தடுப்பூசி வழங்கல் மூலம் மட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்தத் தொற்றுப்பரவல் நாடொன்றில் முதலீடு செய்வதற்கும் வணிக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமான நம்பகத் தன்மையிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 

எனினும் தற்போது நாடளாவிய ரீதியில் அதிதீவிர பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது முடிவுற்றதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்று நம்புகின்றேன்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அவசியமான நுண்பாகப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவது மத்திய வங்கியின் பிரதான குறிக்கோளாகும். 

உறுதிப்பாடற்ற வளர்ச்சி என்பது எவ்வகையிலும் பயனுடையதாக அமையாது. அதேபோன்று வளர்ச்சியின்றி உறுதிப்பாடு மாத்திரம் காணப்படுமாயின், அதன்மூலம் நிலைபேறான அபிவிருத்தியை அடையமுடியாது.

அதேவேளை இந்த நெருக்கடி நிலைக்கு மத்தியில் சமூக பொருளாதார கட்டமைப்பின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சிறிய, நடுத்தர மற்றும் பெரியளவிலான வணிகங்களின் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க வேண்டும். 

ஏனைய நிதி ரீதியான கட்டமைப்புக்களின் உதவியுடன் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய வங்கி முன்னெடுத்து வந்திருக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் கடினமானதொரு சூழ்நிலையிலும் சமூகத்தின் மத்தியில் அமைதியைப் பேணுவதற்கு உதவின. மேலும் இக்காலப்பகுதியில் வங்கிகள் மாத்திரமன்றி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் நிர்வாகம் தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டிய அவசியம் காணப்பட்டது.

எனினும் இக்காலப்பகுதியிலும் கூட பணவீக்கத்தை 4 - 6 சதவீதத்திற்குள் பேண முடிந்தது. மேலும் பொருட்களின் விலைகள் மீது பாரிய அழுத்தமொன்று காணப்பட்டாலும், அது அதிகரிக்காமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மத்திய வங்கியினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad