கொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டொலர் இழப்பீடு தர வேண்டும் - அமெரிக்க முன்னால் ஜனாதிபதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

கொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டொலர் இழப்பீடு தர வேண்டும் - அமெரிக்க முன்னால் ஜனாதிபதி

கொரோனாவை பரப்பியதற்காக சீனா  10 டிரில்லியன் டொலர்களை இழப்பீடாக தர வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடிய சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப், சீனா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கூட இன்னமும் எட்டாத நிலையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த படாதபாடுபட்டன.

உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடிய சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப், சீனா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ‘சைனீஸ் வைரஸ்’ என்று அப்போது வர்ணித்தார். இது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.

இதற்கிடையே, சமீப காலமாக கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்தே வெளிப்பட்டதாக மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் கூறியுள்ளதாவது சீனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் வெளியே கசிந்தது என்று நான் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர் என்னை கடுமையாக விமர்சித்தனர். அமெரிக்காவில் கூட எனது வாதத்திற்கு எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. 

ஆனால் நான் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன. சீனாதான் காரணம் என்பதை தற்போது அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர்.

சீனா வைரசினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 டிரில்லியன் டொலர்களை சீனா கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad