இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார் இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார் இராணுவத் தளபதி

எம்.மனோசித்ரா

பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினால் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பிட்டவொரு பிரதேசத்தில் குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அதனை தனிமைப்படுத்திய பின்னர், தேவையானளவு பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று சில பிரதேசங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் ஊடாக பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவிக்கவில்லை.

கடந்த காலங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்தமையே தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏதேனுமொரு பிரதேசத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்களாயின் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதற்கமைய பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவும் அதிகரிக்கும். எனவே அதனை நிறுத்த முடியாது. அதற்கமைய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லது குறைவடையும். இதனை திரிபுபடுத்த முடியாது. 

அதிகளவில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்தால் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கருத முடியாது. கடந்த காலங்களில் சுமார் 10000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது 150 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. இதேபோன்று 15000 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 600 - 700 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.

எவ்வாறிருப்பினும் சில பகுதிகளில் அநாவசியமாக அளவுக்கதிகமாக பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது. குறிப்பிட்டவொரு பிரதேசத்தில் இரு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதற்காக ஆயிரக்கணக்கில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மஹியங்கனை பிரதேசத்தில் சுமார் 15 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமைக்காக 8000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே சுமார் 10 - 15 தொற்றாளர்கள் ஏதேனுமொரு பிரதேசத்தில் இனங்காணப்பட்டால் அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்து, பின்னர் அந்த பிரதேசத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மதிப்பீடு செய்து தேவையானளவு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்தில் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினால் பி.சி.ஆர். பரிசோதனைகளை குறைக்குமாறு அறிவிக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment