தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு மக்கள்தான் காரணம் எனக்கூறி அவர்கள் மீது பழி சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நிரோஷன் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு மக்கள்தான் காரணம் எனக்கூறி அவர்கள் மீது பழி சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நிரோஷன் பெரேரா

எம்.மனோசித்ரா

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம் என்று காண்பிப்பதற்காக அரசாங்கம் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்தது. இதன் காரணமாகவே கடந்த சில வாரங்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்பட்டது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு மக்கள்தான் காரணம் எனக்கூறி அவர்கள் மீது பழி சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா சுனாமிக்கு அரசாங்கமே பொறுப்பு. ஆரம்பத்திலேயே தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் தற்போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது.

நாடு முகங்கொடுத்துள்ள அபாய நிலைமையை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் உண்மையை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கடந்த காலங்களில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக காண்பிப்பதற்காகவே பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவும் குறைக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல், எதிர்காலத்தில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும், தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மக்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்க வேண்டாம். முறையான வழிமுறைகளினூடாக பொருளாதாரத்தை மேம்படுத்தி, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சீனாவிடம் கடன் பெறுவதன் மூலம் சகல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அரசாங்கம் எண்ணுவது தவறாகும். கடன் பெறுவதன் மூலம் மேலும் மேலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியே ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment