ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பீடி இலைகள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பீடி இலைகள் மீட்பு

செ.தேன்மொழி

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1500 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இந்தியா - தூத்துக்குடி பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்து வரப்பட்ட பீடி இலைகளுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீடி இலைகளை இந்தியாவிலிருந்து சர்வதேச கடல் எல்லைக்கு எடுத்துவந்து பின்னர் அதனூடாக இலங்கைக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு கடற்கரையோரத்தில் நேற்று அதிகாலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரப்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியொன்றில் பொதிகள் ஏற்றப்படுவதை அவதானித்துள்ளனர்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இதன்போது குறித்த பொதிகளிலிருந்து 1500 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பீடி இலைகளை கடத்த பயன்படுத்திய வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பீடி இலை தொகையை நாட்டுக்கு எடுத்துவந்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad