கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை முகக்கவசம், அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களுக்கு பற்றாக்குறை : அகில இலங்கை தாதியர் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை முகக்கவசம், அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களுக்கு பற்றாக்குறை : அகில இலங்கை தாதியர் சங்கம்

(நா.தனுஜா)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கும் வழங்கப்பட்டுவந்த சத்திர சிகிச்சை முகக்கவசங்களுக்கும் அவசர விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அகில இலங்கை தாதியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனை கடந்த 7 ஆம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. 

அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்வதற்கான உபகரணங்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே இதற்கான காரணமென அறிய முடிகின்றது. அத்தோடு இந்த நிலை வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு விபத்துக்குள்ளாகி வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் வெவ்வேறு நோய்நிலைமைகளுக்கான சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை தரும் நோயாளர்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை மாத்திரம் கண்டறிவதற்கு இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதனூடாக வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காவதைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சகல ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்த சத்திர சிகிச்சை முகக்கவசங்களுக்குத் தற்போது பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது அவ்வைத்தியசாலையின் அனைத்து வார்ட்டுக்களுக்கும் நாளாந்தம் 50 முகக்கவசங்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றன. அது ஒரு வார்ட்டில் ஒருமுறை வழங்கப்படும் மருத்துவ சேவைக்குக்கூடப் போதுமானதாக இல்லை. 

அதேபோன்று பி.பி.ஈ பாதுகாப்பு அங்கிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களும் அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களும் பாரிய சுகாதாரப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் வைத்தியசாலைகளுக்கு அவசியமான அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களையும் தேவைக்கு ஏற்றவாறு வழங்கி வைக்குமாறு நாம் ஏற்கனவே சுகாதாரப் பிரிவின் அதிகாரிகளிடமும் வைத்தியசாலைகளின் பிரதானிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும் அக்கோரிக்கை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நீண்டகாலக் கொள்கை மற்றும் முறையான செயற்திட்டங்களின்றி செயற்பட்டுவந்த அரசாங்கத்தினதும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளினதும் தீர்மானங்களின் விளைவுகளைத் தற்போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனினும் அவற்றை வைத்தியசாலை ஊழியர்களும் அப்பாவி நோயாளர்களும் பொதுமக்களும் அனுபவிக்க நேர்ந்துள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ள போதிலும், தமது உயிர்ப்பாதுகாப்பையும் பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் மருத்துவ ஊழியர்கள் உள்ளடங்கலாக அனைத்து சுகாதாரப் பணியாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad