தனவந்தர்களை மகிழ்ச்சிப்படுத்த இந்தியர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது : ஹர்ஷன ராஜகருணா - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

தனவந்தர்களை மகிழ்ச்சிப்படுத்த இந்தியர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது : ஹர்ஷன ராஜகருணா

எம்.மனோசித்ரா

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இலங்கையர்கள் அங்கு பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் தற்போதுள்ள அபாய நிலைமையை நன்கு அறிந்திருந்தும் தனவந்தர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இந்தியர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு கேலிக்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இனியாவது வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை மட்டுப்படுத்த வேண்டாம் என்று நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம். எனினும் பி.சி.ஆர். பரிசோதனைகள் குறைக்கப்பட்டமையின் காரணமாக தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்பட்டது. தற்போது அபாயம் மிக்க நிலைக்கு நாடு சென்றுள்ள போதிலும், இப்போதும் பரிசோதனைகளின் அளவை குறைவடையச் செய்யவே முயற்சிக்கின்றனர். அரசாங்கத்தின் அசமந்தமான செயற்பாடுகளின் காரணமாகவே மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு சில பிரதேசங்களில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பிரதேச மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே உண்மை நிலைவரமாகும். ஆனால் அரசாங்கம் அதனை மறைக்கிறது. 

இது இவ்வாறிருக்க பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவுகளும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் இவை தொடர்பில் தற்போதும் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேயொரு வழி தடுப்பூசி வழங்குவது மாத்திரமேயாகும் என்று ஜனாதிபதி கூறுகின்ற போதிலும், முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை எவ்வாறு வழங்கப் போகிறார்கள் என்பதற்கான தயார்ப்படுத்தல் செய்யப்படவில்லை. 

மாறாக அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டிலும் இல்லாதவாறு இவ்வாறு முட்டாள்த்தனமாக செயற்படாமல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அயல் நாடான இந்தியாவில் ஏற்பட்டுள்ள அபாய நிலைமையை நன்றாக அறிந்துள்ள போதிலும், தற்போது நாளொன்றுக்கு இந்தியாவிலிருந்து 3 ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் விமானங்கள் வருகின்றன. ஆனால் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை பிரஜைகள் அந்நாட்டுக்குள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன. 

ஆனால் இலங்கை அரசாங்கம் தனவந்தர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்தியர்களுக்கு இலங்கைக்குள் தனிமைப்படுத்தல் வசதிகளை செய்து கொடுக்கிறது. எமக்கு இந்தியாவுடனோ சீனாவுடனோ ஏனைய நாடுகளுடனோ தனிப்பட்ட பகைமை எதுவும் கிடையாது. எனவே மக்கள் நலன் கருதி கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad