மற்றைய பிணை முறி மோசடி வழக்கிலிருந்தும் முன்னாள் நிதியமைச்சர் ரவி உள்ளிட்டோருக்கு பிணை - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

மற்றைய பிணை முறி மோசடி வழக்கிலிருந்தும் முன்னாள் நிதியமைச்சர் ரவி உள்ளிட்டோருக்கு பிணை

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு, கடந்த 2016 மார்ச் 29 இல் இடம்பெற்ற முதலாவது மத்திய வங்கி பிணை முறி வழங்கலில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று (01) பிற்பகல் விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, மஞ்சுள திகலரத்ன, மொஹமட் இர்ஷடீன் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிபதிகளில் இருவரின் பெரும்பான்மை முடிவுக்கு அமைய, பிணையில் விடுவிக்கும் உத்தரவை நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இலங்கை மத்திய வங்கியில் கடந்த 2016 மார்ச் 29 இல் இடம்பெற்ற முதலாவது பிணை முறி வழங்களில் இடம்பெற்ற முறைகேட்டின் மூலம், ரூ. 36. 89 பில்லியன் (ரூபா 3,689 கோடி) அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்தே குறித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 மார்ச் 31இல் இடம்பெற்ற இரண்டாவது பிணை முறி வழங்கலில் முறைகேடாக பயன்படுத்திய ரூபா. 1.5 பில்லியன் (ரூ. 150 கோடி) தொடர்பான வழக்கில், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களுக்கும் இன்று (01) முற்பகல் பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad