இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகளை தோற்கடிக்க நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகளை தோற்கடிக்க நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தினரையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க ஜெனிவா விவகாரத்தில் ஒருமித்த கொள்கையினை பேணுவது அவசியமாகும். இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகளை தோற்கடிக்க நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்க மாநாட்டில் கலந்துககொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டு 12 மணித்தியாலங்களுக்குள் அதிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த 12 பேரை உள்ளடக்கிய குழுவை நியமிப்பதற்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பபம் கோரப்பட்டுள்ளது.

12 பேர் உள்ளடங்கிய கண்காணிப்பு குழுவின் செயற்பாட்டுக்கு 12.8 மில்லியன் டொலர் அவசியம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான நிதி பேரவையின் இருப்பில் கிடையாது என மனித உரிமை பேரவையின் செயலாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

12 பேரை உள்ளடக்கிய இக்குழுவினர் தகவல் சேகரிப்பதற்கு 72000 அமெரிக்க டொலரும், வெளிநாட்டு பயணங்களுக்காக 41500 அமெரிக்க டொலரும் ஒதுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் சேவையாற்றிய என்டன் கேஷ் தயாரித்த அறிக்கை தொடர்பில் பிரித்தானியா இரு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை..

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக சாட்சியமளித்துள்ளவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து அறிய முடியாத தன்மை காணப்படுகிறது.

அறிக்கையினை 20 வருட காலத்திற்கு முழுமையாக பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு சூட்சம தன்மை காணப்படுகிறது. இது நியாயமல்ல. நாட்டுக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள சூழ்ச்சியை வெற்றிகொள்ள நாடு என்ற ரீதியில் ஒன்றுப்பட வேண்டும்.

ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு காண எதிர்தரப்பினர் ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளதை அறிய முடியகிறது.

ஜெனிவா விவகாரத்தை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும். காலத்திற்கு தேவையான வகையில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

கடந்த 10 வருட காலமாக நடைமுறை சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment