ஒலுவிலில் கடும்போக்குவாத போதனைகளை நடாத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது - உடல் ரீதியான பயிற்சிகளை மறுத்த மாணவர்கள் மீது தாக்குதல் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

ஒலுவிலில் கடும்போக்குவாத போதனைகளை நடாத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது - உடல் ரீதியான பயிற்சிகளை மறுத்த மாணவர்கள் மீது தாக்குதல்

மாணவர்களுக்கு கடும்போக்குவாத போதனைகளை நடாத்திய குற்றச்சாட்டில் ஒலுவிலைச் சேர்ந்த இருவர், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்படுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் 30 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும், நேற்றையதினம் (07) ஒலுவிலில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2018 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு, அடிப்படைவாத மற்றும் கடும்போக்குவாத விடயங்கள் உள்ளடங்கிய வகுப்புகளை நடாத்தியமை, அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டிலுள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகள் தங்கள் அமைப்புக்களுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் காட்சிப்படுத்தும் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இதன்போது அவர்களுக்கு காண்பித்ததாக தெரிவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2018 டிசம்பரில் ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்வகுப்புகள் ஆரம்பிக்க முன்னதாக, மாணவர்களின் விருப்பமின்றி உடல் ரீதியான பயிற்சிகளை வழங்கியதாகவும், குறித்த பயிற்சிகளில் ஈடுபட மறுத்த மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தாக்குதலுக்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலர் TID யினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை சட்ட வைத்தியரரின் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான தாக்குதல்தாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கமைய குறித்த வகுப்புகள் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் தற்போது கொழும்பிலுள்ள TID யிற் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு வகுப்புகளை நடாத்திய குற்றச்சாட்டில் மூதூரைச் சேர்ந்த இருவர் அண்மையில் TID யினால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறான வகுப்புகள் நடாத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad