மட்டக்களப்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து தர வேண்டும் - கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள நான்கு ஊர்களின் சம்மேளனம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

மட்டக்களப்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து தர வேண்டும் - கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள நான்கு ஊர்களின் சம்மேளனம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்கள் வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து தர வேண்டும் எனும் கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனங்கள் கூட்டிணைந்து மட்டக்களப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் இந்தப் பிரதேச செயலகப் பிரிவுகள் கடந்த 19 வருடங்களாக இயங்கி வருகின்ற போதும் அவை எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளதாக சம்மேளனப் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டினர்.

மேற்படி விடயம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பிர் நஸீர் அஹமட்டிற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு முஸ்லிம் பிரதேசங்களையும் சேர்ந்த பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை 31.03.2021 இரவு நாடாளுமன்ற உறுப்பினரின் ஏறாவூர் மக்கள் பணிமனையில் இடம்பெற்றது.

அங்கு நாடாளுமன்றப் பிரதிநிதியிடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து உடனடியாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்த வேண்டும்.

அவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துவதன் ஊடாகவே நிருவாக முரண்பாடுகளை நீக்கி அரச நிருவாக நடவடிக்கைகளை இலகுவாக மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்ப்பிக்க வழியேற்படும் என்றும் அங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பிரதேச செயலகங்கள் 1999ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பன்னம்பலன ஆணைக்குழவின் சிபார்சுக்கமைவாகவும் 13.07.2000 ஆம் ஆண்டின் அமைச்சரவைப் பத்திர 00/1355/05/65 இலக்க தீர்மானத்திற்கு அமைவாகவும் 2002.05.25ஆம் திகதி உருவாக்கப்பட்டவையாகும்.

எனினும் இவை ஸ்தாபிக்கப்பட்டு சுமார் 19 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் இப்பிரதேச செயலகப் பிரிவகளுக்குரிய எல்லைகளும் நிருவாகப் பிரிவுகளும் உரிய முறைப்படி பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.

இந்த விடயம் உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் சம்மேளனப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad