சுகாதார விதிகளை மீறுவோரை கண்டறிய சிவில் உடையில் பொலிஸார் - முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 177 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

சுகாதார விதிகளை மீறுவோரை கண்டறிய சிவில் உடையில் பொலிஸார் - முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 177 பேர் கைது

சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை மீறும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை காணப்படுகின்றது. இதனை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் பரவலை அடுத்து சிறிய அளவிலான கொவிட் கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது.

புதிதாக வைரஸ் கொத்தணி உருவாவதை கவனத்தில் கொண்டு தற்பொழுது பொலிஸார் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளை துரிதமாக விரிவுபடுத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினத்தில் சிவில் உடையில் பொலிஸார் இந்த கடமையில் ஈடுபட்டனர். வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளை பொதுமக்கள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசத்தை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சுகாதார அதிகாரிகளின் அனுமதி இன்றி பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்தக்கூடாது.

நேற்றைய தினத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுள் 134 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டனர். கொழும்பு நகரத்தில் 34 பேரும், கம்பஹா பிரதேசத்தில் 45 பேரும், களுத்துறை பிரதேசத்தில் 50 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

2020 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் ஒரு நாளில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் ஆகக் கூடுதலானோர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 3647 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad