இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும், இந்தியாவின் ஆலோசனையை பெற வேண்டிய தேவை கிடையாது : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும், இந்தியாவின் ஆலோசனையை பெற வேண்டிய தேவை கிடையாது : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை கிடையாது. வெள்ளை யானையாக கருதப்படும் மாகாண சபை முறைமையினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தயாரில்லை என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

மருதானையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வெள்ளை யானையாக சித்தரிக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியமற்றது என்பது பெரும்பாலான மக்களின் அபிப்பிராயமாக காணப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் அவசியமா, இல்லையா என்பது தொடர்பில் நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் இவ்விடயத்தில் இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் ஆலோசனைகளை கோருவது பயனற்றது.

பலவீனமான மாகாண சபை முறைமையினை தொடர்ந்து வலுப்படுத்த நாம் தயாரில்லை. மாகாண சபை முறைமையின் கீழ் வீண் செலவுகள் மாத்திரமே மிகுதியாகுகின்றன.

மாகாண சபைத் தேர்தலை விடுத்து உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற சபைகளிலும் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

மாகாண சபை முறைமையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளுடன் மாகாண சபைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது. ஆகவே மாகாண சபை முறைமை குறித்து உறுதியான தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad