உறுதிப்படுத்தப்பட்டால் சாராவை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவை கோருவோம் : உதய கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

உறுதிப்படுத்தப்பட்டால் சாராவை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவை கோருவோம் : உதய கம்மன்பில

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சாரா என்ற சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகின்றதே தவிர, அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்விடயம் உறுதிப்படுத்தப்படுமாயின் அவரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவோம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சாரா தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைக் கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சாரா என்ற சந்தேகநபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறதே தவிர, அது உறுதிப்படுத்தப்பட்ட விடயமல்ல. 

இந்தியாவில் அவர் இருப்பதாகவோ அல்லது அந்நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவோ, அந்நாட்டில் வாழ்வதாகவோ உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.

சாரா இந்தியாவில் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டால், அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு வாய்ப்பளிப்பதோடு, குறித்த பெண் இலங்கை பிரஜை என்பதால் சட்ட விரோதமாகவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதால் மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவோம். 

எவ்வாறிருப்பினும் அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றதே தவிர அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad