இயற்கை வனப் பகுதிகளை பாதுகாப்பது நாட்டு மக்களின் கடமை - காடழிப்பு தொடர்பில் முறைப்பாடளிக்க அவசர தொலைபேசி இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

இயற்கை வனப் பகுதிகளை பாதுகாப்பது நாட்டு மக்களின் கடமை - காடழிப்பு தொடர்பில் முறைப்பாடளிக்க அவசர தொலைபேசி இலக்கம்

(இராஜதுரை ஹஷான்)

திட்டமிட்டு காடுகளை அழிக்கின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காடழிப்பு தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாட்டை பெற்றுக் கொள்ள 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் சுற்றாடல் பிரிவுக்கு விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினர் இவ்விசேட பிரிவுக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். வனப் பகுதிகள் அழிக்கப்படுபவை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளுக்கு அமைய துரிதமாக செயற்படுவது இப்பிரிவின் பொறுப்பாகும்.

வனப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வகுத்துள்ள செயற்திட்டங்களை செயற்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். பொதுமக்களிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ள 1997 என்ற அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட காடழிப்புடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை சட்டத்தின் ஊடாக வழங்கப்படும். காடழிப்பு என்பது நாட்டை அழிப்பதற்கு சமமாகும். ஆகவே காடழிப்பு குறித்து அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளார்.

இயற்கை வனப் பகுதிகளை பாதுகாப்பது நாட்டு மக்களின் கடமையாகும். ஆகவே காடழிப்பு தொடர்பிலான தகவல்களை மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க வேண்டும். 

மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் பாரிய விளைவுகளை தவிர்க்க கூடியதாக அமையும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment