அரசாங்கத்திற்கு எதிராக காணப்படுகின்ற விடயங்களை மறைப்பதற்காகவே விசேட ஜனாதிபதி ஆணைக்குழு - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

அரசாங்கத்திற்கு எதிராக காணப்படுகின்ற விடயங்களை மறைப்பதற்காகவே விசேட ஜனாதிபதி ஆணைக்குழு - லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளமை சட்டத்துக்கு முரணானதாகும். குறித்த அறிக்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக காணப்படுகின்ற விடயங்களை மறைப்பதற்காகவே ஜனாதிபதியால் இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை சட்டத்துக்கு முரணானது. 

நான் சபை முதல்வராக இருந்த போது, ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கப்பட்டுள்ள சாட்சியை அடிப்படையாகக் கொண்டு தொடர்பில் சட்டமா அதிபருக்கும் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்ற சட்டத்தை முன்வைத்தேன். அதற்கு முன்னர் அவ்வாறானதொரு சட்டம் காணப்படவில்லை. 

அந்த சட்டத்திற்கு ஏற்ப ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டவுடன் அதனை உடனடியாக சட்டமா அதிபரிடம் கையளிக்க வேண்டும். ஆனால் அந்த அறிக்கையை ஆராய்வது முறையற்ற செயற்பாடாகும்.

இந்த அறிக்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான விடயங்கள் குறிப்பிட்பட்டுள்ளன. எனவேதான் அந்த விடயங்களை மறைப்பதற்காக இவ்வாறானதொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் மாத்திரமே இந்த அறிக்கையை ஆராய முடியும். மாறாக ஜனாதிபதியால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது. அவ்வாறு நடந்தால் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கும். 

எனவே இந்த அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் அவ்வாறே சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் இதனையே கூறுகின்றார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. அவ்வாறு செய்தால் அவர்களை சிறைக்கும் அனுப்ப முடியும். 

உண்மையில் இந்த அறிக்கையை ஆராய வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு காணப்பட்டால் நீதிபதிகள் கொண்ட குழுவையேனும் நியமித்திருக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment