ஜனாதிபதியின் கையெழுத்துடன் இந்திய பிரதமருக்கு கடிதம் : பல்வேறு உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை : இலங்கையின் நிலைப்பாடு தெளிவாக ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்கப்படும் - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

ஜனாதிபதியின் கையெழுத்துடன் இந்திய பிரதமருக்கு கடிதம் : பல்வேறு உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை : இலங்கையின் நிலைப்பாடு தெளிவாக ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்கப்படும்

(ரொபட்அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதம் எமது தூதரகம் ஊடாக இந்திய பிரதமருக்கு கிடைத்திருக்கின்றது. அந்த வகையில் இந்தியா இந்த கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இவ்வாறு இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இறைமை உள்ளநாடு என்ற வகையில் இலங்கைக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன்போது இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறு புதிய பிரேரணை இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படும் பட்சத்தில் அதனை இலங்கை எதிர்க்கும்போது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு நடத்தப்படும் போது இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை மனித உரிமை பேரவையின் பல்வேறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில் இதில் நான் 23 ஆம் திகதி இரவு 8 மணிக்கு இலங்கையில் இருந்தவாறு இணையவழியில் உரையாற்றவுள்ளேன்.

இதன்போது இலங்கையின் நிலைப்பாடு தெளிவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிவிக்கப்படும்.

நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்ன செய்யப்போகின்றோம் எமது நிலைப்பாடு என்ன என்ற விடயங்களை நாங்கள் மிகத்தெளிவாக விரிவாக அறிவிப்போம்.

அதே போன்று ஜெனீவாவில் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு நாம் எமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றோம்.

இதேவேளை ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் ஆதரவு வழங்குமாறுகோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் நாங்கள் இவ்வாறு ஒத்துழைப்பு கோரிய கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் கடிதங்கள் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இவ்வாறு ஒரு ஒத்துழைப்பு கோரிய கடிதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்த கடிதம் தற்போது எமது தூதரகம் ஊடாக இந்திய பிரதமரின் கைகளுக்கு சென்றிருக்கின்றது. அதனை அவர்கள் பரிசீலித்து எமக்கு இந்த கூட்டத் தொடரின் போது ஆதரவு வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு பல நாடுகளினாலும் ஆதரவு வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியா என்பது ஒரு மிகப் பெரிய நாடு. இந்தியாவானது இலங்கைக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதன்படி இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கின்றோம். 

இலங்கை இறைமையுள்ள நாடு. ஒரு இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர முடியாது. அந்த வகையில் அவ்வாறான ஒரு முயற்சி இடம்பெறும்போது எமக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும் என்று நம்புகிறோம்.

குறிப்பாக சீனாவும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad