முறையான திட்டமிடலற்ற தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தால் சுகாதார ஊழியர்களுக்கும், மக்களுக்கும் அசௌகரியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

முறையான திட்டமிடலற்ற தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தால் சுகாதார ஊழியர்களுக்கும், மக்களுக்கும் அசௌகரியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

உலக நாடுகள் அனைத்தும் முறையான திட்டமிடலின் அடிப்படையில் கொவிட் தடுப்பூசிகளை வழங்குகிறது. ஆனால் இலங்கையில் அவ்வாறு எந்தவொரு திட்டமிடலும் இன்றி தடுப்பூசி வழங்கப்படுவதால் சுகாதார ஊழியர்களும் பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உலக நாடுகள் அனைத்தும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வயதானவர்களுக்குமே தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கியது. ஆனால் இலங்கையில் எவ்வித திட்டமிடலும் இன்றி தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிடலொன்று தயாரிக்கப்பட்டு ஜனவரி 15 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டமிடல்கள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் யாருடைய தேவைக்காக, எந்த தொழிநுட்ப குழுவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இதன் மூலம் சுகாதார ஊழியர்கள் பாரிய நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர். புதிய வேலைத்திட்டம் தொடர்பில் வழிகாட்டல் ஆலோசனைகளை வெளியிடுவதற்குக் கூட சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் முடியாமல் போயுள்ளது.

உதாரணமாக 30 - 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்றால் குறிப்பிட்ட நபர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும் தெரியப்படுத்தப்படவில்லை. 

தேர்தல் இடாப்பின் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றதா அல்லது பொது சுகாதார பிரிசோதகர்கள் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களும் கலவரமடைந்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad