6 சதவீத பொருளாதார வளர்ச்சியை இவ்வருட இறுதிக்குள் எதிர்பார்க்கிறோம் - ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன : இலங்கை மத்திய வங்கி ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

6 சதவீத பொருளாதார வளர்ச்சியை இவ்வருட இறுதிக்குள் எதிர்பார்க்கிறோம் - ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன : இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதன் விளைவாகக் கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாகவே பதிவாகியுள்ளது. எனினும் இவ்வருட முடிவில் 5.5 - 6 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி டபிள்யூ.டி.லக்ஷமன் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இது பற்றி குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது நாட்டின் பொருளாதாரம் எவ்வாறான நிலையிலுள்ளது என்பது குறித்து செய்திகளை வெளியிடுவதற்கான உரிமை உண்டு. எனினும் நாம் தற்போதைய நிலைவரத்தைக் கையாளும் விதம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் கட்டுரைகளில் பல்வேறு திரிபுபடுத்தப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் மிகவும் பக்கச்சார்பாக அமைந்துள்ளமை தெளிவாகப் புலப்படுகின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலை ஆகியவற்றுக்கு மத்தியிலும் நாம் எமது செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தோம். இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையான தாக்கங்களுக்கு முகங்கொடுத்ததுடன் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் காலரைப்பகுதியில் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டமையால், ஒட்டு மொத்த ஆண்டிலும் பொருளாதாரம் வீழ்ச்சியையே காண்பித்துள்ளது. எனினும் அதனை சீரமைப்பதற்குத் தற்போது மத்திய வங்கியுடன் இணைந்து அரசாங்கம் வகுத்துள்ள கொள்கைகளின் ஊடாக 2021 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 தொடக்கம் 6 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு ஏதுவான பல்வேறு காரணங்கள் உள்ளன. 

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையின் போது ஒட்டு மொத்த நாடும் முடக்கப்பட்டது. எனினும் இரண்டாவது அலையின் போது சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைவாக நாட்டின் குறிப்பிட்ட பகுதிகள் மாத்திரமே முடக்கப்பட்டன.

அதேவேளை, தற்போது கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் சில நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியும். மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த காலத்தில் நாட்டின் அனைத்து முக்கிய துறைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

எனினும் சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக முக்கிய துறைகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று மீண்டும் கைத்தொழில் துறைசார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியில் மக்களுக்கு நிவாரணமளிக்கும் நோக்கில் அரசாங்கத்தினாலும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் பொருளாதாரத்தில் சாதக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment