வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி ரூபா மோசடி - கதிரைகளை மாற்றி தமது குற்றங்களை மறைக்க அரசாங்கம் முயற்சி : ஜே.வி.பி. - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி ரூபா மோசடி - கதிரைகளை மாற்றி தமது குற்றங்களை மறைக்க அரசாங்கம் முயற்சி : ஜே.வி.பி.

(செ.தேன்மொழி)

சீனிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரித் தொகை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று திங்கட்கிழமை சட்டத்தரணி சுனில் வட்டகலவுடன் வந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமது முறைப்பாட்டை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிடடார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது, சீனிக்காக நிர்ணயிக்கப்பட்ட வரி தொகையை மாற்றம் செய்வது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருந் தொகையான வரிப் பணம் கிடைக்கப் பெறாமல் போயுள்ளது. 

இந்நிலையில் இந்த வர்த்தமானி அறிவித்தல்களை தமக்கு சாதகமான பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இறக்குமதியாளர்கள் இலாபமீட்டிக் கொண்டுள்ளமை தொடர்பில், முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு முறைப்பாடு அளிக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்.

இந்நிலையில், அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர், அரச நிறுவனவங்களின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்த திட்டமிட்ட பண மோசடிக்கு இடமளிக்கும் வகையில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை என்பன இணைந்தே தீர்மானங்களை எடுத்துள்ளன. 

இதன்போது, ஒரு கிலோ கிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் வரிப்பணத்தை, 25 சதத்தால் குறைப்பது தொடர்பில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே இந்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து சதோச நிறுவனத்தின் தலைவர் இந்த கதிரையிலிருந்து நீக்கப்பட்டு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கதிரைகளை மாற்றுவதன் ஊடாக தமது குற்றங்களை அரசாங்கம் மறைக்க முயற்சித்தால் அதற்கு இடமளிக்க முடியாது.

திருடர்களை பிடிப்பதற்காக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் , மக்களுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளது. மக்களுக்கு 85 ரூபாவுக்கு சீனியை விற்பனை செய்யுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கமையவே, இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், கொவிட்-19 தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்காக 1000 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். அதனால் இந்த மோசடி தொடர்பில் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதேவேளை, இலஞ்சம் மறறும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிலும் நாம் இது தொடர்பில் முறைப்பாடு அளிக்கவுள்ளோம். ஆரம்பத்தில், மத்திய வங்கி பிணைமுறிகள் ஊடாக மோசடிகளைச் செய்தனர் தற்போது வரி அறவீடுகள் ஊடாக மோசடி செய்து வருகின்றனர். இந்நிலையில், தமது வர்த்தக நண்பர்களை போசித்து வரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு நாம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad