பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாததால் மாற்று திட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பேன் என்கிறார் அமைச்சர் நிமல் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 10, 2021

பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாததால் மாற்று திட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பேன் என்கிறார் அமைச்சர் நிமல்

(எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாததால் மாற்று திட்டம் ஒன்றை இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பேன் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் பரிந்துரைக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்தை இனக்கப்பாடு இன்றி முடிவுற்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா என்ற அரசாங்கதின் வரவு செலவு திட்ட பிரேரணை தொடர்பில், தொழில் அமைச்சில் கடந்த 7ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடலில் தோட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள், முதலாளிமார் மற்றும் தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

இருந்தபோதும் குறித்த கலந்துரையாடலில் பொதுவான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயிருந்தது. அதனால் இது தொடர்பாக மாற்று யோசனை ஒன்றை இன்றைய தினம் அமைச்சரவை கூடும்போது சமர்ப்பிக்க இருக்கின்றேன்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதென்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற மாட்டோம். இது தொடர்பாக கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக இரண்டு தரப்பினருக்கும் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். 

என்றாலும் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வர முடியாமல் போனாதல், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கான மாற்றுத்திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானித்தேன். அதன் பின்னர் விரைவில் குறித்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment