முரண்பாடற்ற தேர்தல் முறைமையினை புதிய அரசியலமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்த தீர்மானம் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

முரண்பாடற்ற தேர்தல் முறைமையினை புதிய அரசியலமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்த தீர்மானம் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது. புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை எதிர்காலத்தில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையின் சாதக தன்மையினை உள்ளடக்கி முரண்பாடற்ற தேர்தல் முறைமை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். தேர்தல் முறைமையில் பாரிய சிக்கல் தன்மை காணப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் மற்றும் பொதுக் காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் மக்களின் ஜனநாயக உரிமையுடன் தொடர்புபட்டுள்ளது. ஆகவே மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையில் எதிர்காலத்தில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் சிறந்த நோக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மூல கொள்கையின் நோக்கம் மறுதழிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தேர்தல் முறைமை நகைப்புக்குரியதாக காணப்படுகிறது. அரச நிர்வாகம் ஜனாதிபதி, பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றம் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் மாத்திரம் இதுவரையில் சிறந்த தேர்தல் முறைமை ஊடாக நடத்தப்பட்டுள்ளது. ஏனைய தேர்தல்கள் காலத்திற்கு காலம் மாறுபட்ட தேர்தல் முறைமைகளில் நடத்தப்பட்டுள்ளது. இது பொருத்தமற்றதாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமைகளின் சாதக தன்மைகளை பாதுகாத்து முரண்பாடற்ற தேர்தல் முறைமையினை புதிய அரசியலமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்களை நடத்தும் தேர்தல் முறைமை முரண்பாடற்றதாக காணப்பட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாகக்த்தினால் பாதிக்கப்பட்ட சேவைக் கைத்தொழில் பல மீண்டும் சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் காரணத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை அரசாங்கத்தின் பலவீனம் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும். பாரிய சவால்கள் எழுந்துள்ளன. அனைத்து சவால்களையும் அரசாங்கத்தினால் மாத்திரம் வெற்றி கொள்ள முடியாது.

கொவிட-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சவால்களை வெற்றி கொள்ள நாட்டு மக்கள் சுகாதார தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுகாதார வழிமுறைகளை பின்பற்ற முடியாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கையாகும். வெகுவிரைவில் அனைத்து சவால்களையும் மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றி கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad