சிங்கப்பூர் பிரதமர் முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் : ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசியை முதலில் பெற்ற ஆசிய நாடு - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

சிங்கப்பூர் பிரதமர் முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் : ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசியை முதலில் பெற்ற ஆசிய நாடு

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை காலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அங்கு நாடு தழுவிய அளவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியிருக்கிறது.

இதையொட்டி முதலாவது நபராக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் லீ. இதையடுத்து முப்பது நிமிடங்களுக்கு அவர் கண்காணிப்பில் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி வலியற்றது, திறன்மிக்கது, முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

இத்தடுப்பூசியை சிங்கப்பூரில் உள்ள அனைவரும் போட்டுக் கொள்வார்கள் என தாம் நம்புவதாக குறிப்பிட்ட பிரதமர் லீ, சிங்கப்பூர் குடிமக்கள் மட்டுமல்லாமல் அங்கு நிரந்தரமாக வசிக்கும் உரிமம் பெற்றவர்களுக்கும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கூட தடுப்பூசி போடப்படும் என்றார்.

"மேலும் பல தடுப்பூசிகள் வர உள்ளன. அவற்றை வாங்குவதற்கு நாம் முன்பே நடவடிக்கை மேற்கொண்டோம். அதனால் சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்," என்று பிரதமர் லீ உறுதியளித்தார்.

அவர் இடது கை பழக்கம் உள்ளவர் என்பதால் வலது கையில் ஊசி போடப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு அவருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்படும்.

ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசியை 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதை நினைவூட்டும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அனைவருக்கும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு ஓர் அட்டை வழங்குகிறது. அதில், அடுத்த டோஸ் தடுப்பூசியை எப்போது போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுடன், ஊசி போடுவதற்கான முன்பதிவு, நேரம் ஆகிய விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

சிங்கப்பூர் அரசு தன் குடிமக்களுக்காக வாங்கும் கொரோனா தடுப்பூசி நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று பிரதமர் லீ கடந்த மாதம் உத்தரவாதம் அளித்திருந்தார். 

மேலும் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த முதற்கட்டமாக தாமும், தமது அமைச்சரவை சகாக்களும் அதை முதலில் போட்டுக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

சிங்கப்பூர் குடிமக்களுக்கும் அந்த நாட்டில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

"இந்த தடுப்பூசி நம்மை பாதுகாப்பாக இருக்கச் செய்வதுடன், நமது அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கிறது. எனவே உங்களுக்கான வாய்ப்பு வரும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்தப்படும்போது ஊசி கைக்குள் நுழைவதே தெரியவில்லை," என்றார் பிரதமர் லீ.

கடந்த டிசம்பர 21ஆம் திகதி ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி சிங்கப்பூர் வந்தடைந்தது. பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகள் உடனடியாக குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் அடங்கிய வாகனங்கள் மூலம் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதன் மூலம் ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசியை முதலில் பெற்ற ஆசிய நாடானது சிங்கப்பூர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அந்நாட்டின் தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் லியோ யீ சின் உட்பட 40 ஊழியர்கள் டிசம்பர் 30 அன்று தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மூத்த தாதியான ஃபாத்திமா ஷா, பிரதமர் லீக்கு தடுப்பூசி போட்டார். இதையடுத்து அரை மணி நேரம் அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்து மேலும் சில தகவல்களையும் அவர் விவரித்தார்.

அரை மணி நேரத்துக்குப் பின்னர் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், பிரதமருக்கு தடுப்பூசி போடும்போது தமக்கு பதற்றமாக இருந்ததாகவும், இப்படியொரு வாய்ப்பு தமக்கு கிடைத்ததை எண்ணி பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment