யாழ். பல்கலையில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்பு - அங்கீகாரம் வழங்கியது மானியங்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

யாழ். பல்கலையில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்பு - அங்கீகாரம் வழங்கியது மானியங்கள் ஆணைக்குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் விளையாட்டு விஞ்ஞான அலகு, புதியதொரு துறையாக உள்வாங்கப்படவுள்ளது.

1998 ஆம் ஆண்டு, அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளையினால் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆரம்ப காலங்களில் அந்தக் கற்கைநெறி மருத்துவ பீடம், வணிக முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கீழ் மாறி, மாறி செயற்படுத்தப்பட்டது. இரண்டு வருட காலத்தைக் கொண்ட டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களை, மூன்றாம் வருடத்தில் உடற் கல்விமாணிப் பட்டதாரிகளாகப் பயிற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அங்கு நிலவிய உள்ளக முரண்பாடுகள் காரணமாக அது சாத்தியப்படாமல் போனது.

விஞ்ஞான பீடத்தின் கீழும், கலைப் பீடத்தின் கீழும் உடற் கல்விமாணி பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அப்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அங்கீகரிக்கப்படவில்லை.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்பை நடாத்துவதற்காக மூதவை, பேரவை ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கான முன்மொழிவு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த முன்மொழிவு, நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment