அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலாத்துறை கொத்தணி உருவாக வாய்ப்புள்ளது - எச்சரிக்கிறார் ஹர்ஷ டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலாத்துறை கொத்தணி உருவாக வாய்ப்புள்ளது - எச்சரிக்கிறார் ஹர்ஷ டி சில்வா

(இராஜதுரை ஹஷான்)

பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா சபை தயாரித்த கொள்கைக்கு முரணாக சுற்றுலாத்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலாத்துறை கொத்தணி உருவாக வாய்ப்புள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள கட்டியெழுப்ப சுற்றுலா சபை தயாரித்த திட்டத்திற்கு முரணாகவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்திய நாடுகளில் இருந்து மாத்திரமே சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு அழைத்து வர சுற்றுலா சபை திட்டம் வகுத்தது.

சுற்றுலா சபை தயாரித்த திட்டத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தியுள்ள நாடுகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பட்டியலில் உக்ரைன் நாடு குறிப்பிடப்படவில்லை. உக்ரைன் நாட்டில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இதுவரையில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

எமது நாட்டு சனத் தொகையில் ஒரு மில்லியனுக்கு ஒருவர் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறக்கின்ற நிலையில் உக்ரைன் நாட்டு சனத் தொகையில் ஒரு மில்லியன் பேரில் 430 பேர் இறக்கின்றனர். எந்த நாடும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார தாபனம் அறிவிக்கவில்லை.

சுகாதார பாதுகாப்பினை பின்பற்றி சுற்றுலா சேவையில் ஈடுபட சுற்றுலாத்துறை சேவையாளர்கள் தயார் நிலையில் உள்ள போது பிற தரப்பினர் அரசியல் செல்வாக்குடன் சுற்றுலாத்துறை சேவையில் தற்போது ஈடுபடுகிறார்கள்.

உதயங்க வீரதுங்க அலரி மாளிகையின் விலாசத்தை தனது உத்தியோகபூர்வ விலாசமாக குறிப்பிட்டு சுற்றுலாத்துறை சேவையில் ஈடுபடுகிறார். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலா ஊடாக கொவிட்-19 வைரஸ் கொத்தணி தோற்றம் பெறும் அபாயம் காணப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் சுகாதார தரப்பினர் எதற்கு. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகள் பொறுத்தமற்றதாக உள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள். உயர் வர்க்கத்தை திருப்திப்படுத்த அரசாங்கம் பல வரிச்சலுகைகளை வழங்கியது. இதன் தாக்கத்தை இவ்வருடம் எதிர்க் கொள்ள நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad