62 பயணிகளுடன் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாயம் - தேடும் நடவடிக்கை ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

62 பயணிகளுடன் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாயம் - தேடும் நடவடிக்கை ஆரம்பம்

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளது. இந்த விமானத்தில் 62 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கிளம்பிய சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் அந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.

அந்த விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என்கிறது விமான கண்காணிப்பு இணைய தளமான Flightradar24.com.

தேடுதல், மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டுப் போக்கு வரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானம் குறித்த தகவல்களைப் பெற முயன்றுவருவதாக உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஸ்ரீவிஜயா ஏர் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் போயிங் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், சமீப ஆண்டுகளில் அடுத்தடுத்த விபத்துகளால் சர்ச்சைக்குள்ளான 737 மேக்ஸ் ரகம் அல்ல.

2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இன்னொரு இந்தோனேசிய விமான சேவை நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து 189 பேர் இறந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad