அர்ஜுனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை - சட்டமா அதிபரினால் சிங்கப்பூருக்கு விளக்கக் குறிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

அர்ஜுனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை - சட்டமா அதிபரினால் சிங்கப்பூருக்கு விளக்கக் குறிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா நேற்று சிங்கப்பூருக்கு விளக்கக் குறிப்பு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விளக்கக் குறிப்பு தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் சட்டமா அதிபர், நீதி அமைச்சின் செயலாளரிடம் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கு தொடர்பாக முக்கிய சந்தேக நபர்களில் அர்ஜுன் மகேந்திரனும் ஒருவர்.

நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைப்பது குறித்து சட்டமா அதிபரிடம் அறிக்கை கோரியதாக பாராளுமன்றில் கூறினார். இதன்படி சட்டமா அதிபரினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2019 இல், அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையை வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பியது. இந்த கோரிக்கை பின்னர் தேவையான நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டது.

தேவையான ஆதரவு தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்தவுடன் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு முன்னர் தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment