கொரோனாவை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உழைக்க வேண்டும் : மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பிள்ளையான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 11, 2020

கொரோனாவை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உழைக்க வேண்டும் : மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பிள்ளையான்

(கனகராசா சரவணன்)

உலகளாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொவிட்-19 கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் வந்திருக்கின்றது. இதனை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்துக்கு உழைக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கான காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (12) சி.சந்திரகாந்தன் திறந்து வைத்து கடமைகளைப் பெறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த இடத்துக்கு வருவதற்கு பெரும் பங்காற்றிய எனது மக்களுக்கு நன்றி. தேர்தல் காலங்களில் மக்களிடம் அபிவிருத்தி செய்து தருவாக வாக்குறுதியளித்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றோம்.

தற்போது உலகளாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொவிட்-19 கோரோனா மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்திருக்கின்றது. இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்துக்கு உழைக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அந்த அடிப்படையில் கொரோனா தொற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்துக் கொண்டு அதனோடு எங்களுடைய கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பது எங்கள் நோக்கம். அந்தத் திட்டத்துக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

நீண்ட காலமாக நான் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இன்று கடமைகளைப் பெறுப்பேற்ற உடன் நிலைமைகளை அவதானித்துக் கொண்டு 13ஆம் திகதி பெரும் விமர்சனத்தின் மத்தியில் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தை நடத்தவுள்ளோம்.

அந்தக் கூட்டத்தில் முடிந்த வரை 2021ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகளையும் இப்போது இருக்கின்ற மக்களுக்கு உடனடித் தேவையான விடயங்களையும் அவதானித்து அதனை முடித்துக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad