இலங்கையிலும், உலக நாடுகளிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை - புதிய ஒழுங்கு விதிகளினால் தரத்தை குறைப்பதாக அமையாது - மருத்துவ கற்கை நெறிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 4, 2020

இலங்கையிலும், உலக நாடுகளிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை - புதிய ஒழுங்கு விதிகளினால் தரத்தை குறைப்பதாக அமையாது - மருத்துவ கற்கை நெறிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண

இலங்கையிலும், உலக நாடுகளிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையே தற்பொழுது இடம்பெறுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மருத்துவ கட்டளையின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சர்வதேச அமைப்பில் வைரஸ் தொடர்பான நிபுணராக நான் செயற்பட்ட அனுபவம் உண்டு. இத்துறையில் நான் நிபுணர் என்று தெரிவித்த பேராசிரியர் இந்த கொரோனா வைரஸ் இலங்கைக்கு மாத்திரமன்றி உலக நாடுகளுக்குமே புதியதாகும்.

இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை. உலக சுகாதார அமைப்பினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதி அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னும் சில காலம் செல்லும். அந்த அறிக்கை கிடைத்த பின்னர்தான் இது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையை பொருத்த வரையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையிட்டு மகிழ்ச்சியடைய முடியும். இதில் சில குறைபாடுகளும் இருக்கக்கூடும். நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விமர்சனங்களை புறந்தள்ளி எதிர்க்கட்சியினர் இந்த கொடிய வைரசிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் பேராசியர் தெரிவித்தார்.

வைரஸ் தொடர்பிலான விடயங்களை குறிப்பிட்ட அவர், உலகில் வைரஸ் ஒன்று புதிதாக உருவான பின்னர் அது தொடர்பிலான ஆய்வுகள் நடத்தப்படும். சரியான விடயங்களை கண்டறிந்த பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும். தற்போதைய கொவிட் வைரஸ் உலகிற்கு புதிதானதாகும். இது தொடர்பில் கண்டறிவதற்கு காலம் போதுமானதாக இல்லை. அந்த காலத்தை நோக்கி செல்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தினால் ஒரு சந்தர்ப்பத்தில் அது அதிகரிக்க கூடும். மற்றொரு சந்தர்ப்பத்தில் அது குறைவடையக்கூடும்.

கொரோனா வைரஸை பொருத்தவரையில் முதலாவது அல்லது இரண்டாவது அலை ஏற்படும். அதேபோன்று மூன்றாவது, நான்காவது அலைகளும் ஏற்படக்கூடும். இந்த அலைகளும் சமூகத்தில் பரவக்கூடும். உலக நாடுகளை பொருத்த வரையிலும், இலங்கையை பொருத்த வரையிலும் தற்போது வைரஸின் இரண்டாவது அலையே இடம்பெறுகின்றது. இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ரீதியில் நாம் வலுவான நிலையில் இல்லை. இச்சந்தர்ப்பத்தில் இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளக் கூடிய மாணவர்களின் தகுதி குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவரை காலமும் மருத்துவ பீடத்திற்கு 3B சித்தி தகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது இந்த புதிய நடைமுறையின் கீழ் 2C 1S சித்தி இருந்தால் இதற்குள் பிரவேசிக்க முடியும். இது இத்துறையின் தரத்தை குறைப்பதாக அமையாது என நம்புகின்றேன் என்று தெரிவித்த அவர், அதேபோன்று இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி தொடர்பான விடயங்களில் நாம் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். பயிற்சிகளை வழங்கக்கூடிய நிறுனங்களுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மருத்துவ துறையை பொருத்த வரையில் வெளிநாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களே பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இத்துறையுடன் தொடர்புபட்ட சர்வதேச கற்கைநெறி அமைப்பு எமது இப்போதைய நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும். அதன் மூலம் எமது மருத்துவ கற்கை நெறிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் உள்ள மருத்துவ சபைக்கு இதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். தற்பொழுது நீதிமன்ற பிரச்சினை எதிர்நோக்கப்பட்டுள்ளது. சரியான தகுதிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என இதன் மூலம் வழியுறுத்தப்பட்டுள்ளது.

இதனாலையே இந்த பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் இப்போதைய நடைமுறை தீர்வை பெற்றுக் கொடுக்கும். நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி மருத்துவ பீடங்களிலும் இதற்கான வசதிகளை முழுமைப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.

இரண்டு அமைச்சர்களும் இணைந்து தேவைக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தேவையான நிதியும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad