ரஷாத் பதியுதீனுக்கு ஒரு நீதி, ராஜபக்ஷாக்களுக்கு ஒரு நீதியா? - ஹர்ஷண ராஜகருணா - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

ரஷாத் பதியுதீனுக்கு ஒரு நீதி, ராஜபக்ஷாக்களுக்கு ஒரு நீதியா? - ஹர்ஷண ராஜகருணா

(எம்.மனோசித்ரா) 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ராஜபக்ஷாக்களின் அரசியல் மேடைகளில் சித்தரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தற்போது அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுகின்றமை தெளிவாகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இதன் பிரதான சூத்திரதாரி ரிஷாத் பதியுதீன் என்பதைப் போலவே அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. 

இதேபோன்று மேலும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் கூறப்பட்டது. எனினும் தற்போது சில அமைச்சர்கள் இவர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று கூறுகின்றனர். 

பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறியதால் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் தற்போது ரிஷாத்தை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துகின்றனர். 

ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக்க என்போரும் இவ்வாறு அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டனர். அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதால் எமக்கும் இவ்வாறான சம்வங்கள் ஏற்படக்கூடும். 

தற்போது ரிஷாத் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பானதல்ல. தேர்தலின் போது ஆதரவாளர்களுக்கு பேரூந்து வழங்கியமையாலாகும். 

ராஜபக்ஷ அரசாங்கத்தில் ரிஷாத் அமைச்சராக செயற்பட்ட போதும் கூட இவ்வாறு பேரூந்துகள் வழங்கப்பட்டன. இவ்வாறு அரச பேரூந்துகள் மூலம் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ராஜபக்ஷாக்கள் கோடிக்கணக்கான பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. 

ரஷாத் பதியுதீனுக்கு ஒரு நீதி, ராஜபக்ஷாக்களுக்கு ஒரு நீதியா? எனவே அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகிறது என்றார்.

No comments:

Post a Comment