கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தலில் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் : குணதாஸ அமரசேகர ஜனாதிபதிக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தலில் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் : குணதாஸ அமரசேகர ஜனாதிபதிக்கு கடிதம்

(நா.தனுஜா) 

அண்மைக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் நோக்குகையில் கொவிட்-19 வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறியிருக்கிறதா என்றும் வைரஸ் பரவலின் நான்காவது கட்டத்தில் இலங்கை இருக்கிறதா என்றும் சந்தேகம் ஏற்படுவதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர தெரிவித்திருக்கிறார். 

எனவே சந்தேகத்திற்கிடமான அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் சமூகத்தின் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

கொவிட்-19 பரவலின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதுடன் தொடர்புபட்டதாக தற்போது நிலவும் பாரதூரத்தன்மை குறித்து தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார். 

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஆரம்பமாகியிருப்பதுடன் இணைந்ததாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வௌ்வேறு தரப்பினர் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது இரகசியமான விடயமல்ல. 

இந்த நிலைவரமானது வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அவர்களின் நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகிய விடயங்களின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 

அதுமாத்திரமன்றி கொவிட்-19 பரவலின் முதலாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் உங்களின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் அடைந்து கொண்ட வெற்றியினால் மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்ட நன்மதிப்பு, கௌரவம் ஆகியவற்றின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே தற்போது சமுதாயத்தின் மத்தியில் பேசுபொருளாகியுள்ள கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் உயர்மட்டத்தில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஏதேனுமொரு தரப்பினர் வேண்டுமென்றே முறையற்ற விதமான செயற்பாடுகளிலோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரான சதிமுயற்சியிலோ ஈடுபட்டிருப்பார்களாயின், அவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad