தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிற்கோ சஹரானுக்கோ ISIS உடன் நேரடி தொடர்பில்லை மறைமுக சக்தி ஒன்று உள்ளது - ரவூப் ஹக்கீம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிற்கோ சஹரானுக்கோ ISIS உடன் நேரடி தொடர்பில்லை மறைமுக சக்தி ஒன்று உள்ளது - ரவூப் ஹக்கீம்

ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலவீனமடைந்துள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு -  CapitalNews.lk
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிற்கோ அல்லது அதன் தலைவர் சஹரான் ஹாசிமிற்கோ ISIS பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பிருக்கவில்லை என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சி வழங்கும் போதே ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் நாட்டின் நிலையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்ட மறைமுக சக்தி ஒன்று காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ​(07) மாலை 6 மணியளவில் ஆஜரான ரவூப் ஹக்கீம் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ISIS பயங்கரவாதிகளின் பெயர் பயன்படுத்தப்பட்டமையின் ஊடாக தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட மறைமுக சக்தியின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

சஹரான் உள்ளிட்ட குழுவினர் இந்த மறைமுக சக்தியால், தவளைகளாகப் பயன்படுத்தப்பட்டு - பணத்திற்காக பெறப்பட்ட அடிப்படைவாத குழுவினர் எனவும் ஹக்கீம் சாட்சி வழங்கியுள்ளார்.

இது ஒரு தடவையில் மாத்திரம் நடத்தப்படவிருந்த தாக்குதல் எனவும், மீண்டும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த மறைமுக சக்தி யார் என இதன்போது அவரிடம் வினவப்பட்டது.

ஊடகவியலாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்கள் யார் என்பது தொடர்பில் அறிவிக்க தயார் என ரவூப் ஹக்கீம் பதிலளித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினரூடாக அடிப்படைவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களை தௌிவுபடுத்த அப்போதைய அரச தலைவர்கள் கடமைப்பட்டிருந்ததாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான அரசியல் நெருக்கடி, ஒரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட வைராக்கியமாக வலுப்பெற்றதாகவும் ஹக்கீம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டங்களுக்கு தாம் அழைக்கப்படவில்லை என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடியின் போது கூறியதாகவும் ரவூப் ஹக்கீம் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் ஒரு மோதல் நிலை காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பூஜித் ஜயசுந்தரவை பதவியிலிருந்து நீக்குமாறு அப்போதைய ஜனாதிபதி, பிரதமரிடம் கோரியிருந்தாரா என ஜனாதிபதி ஆணைக்குழு இதன்போது ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

விசாரணை நடத்தி பூஜித் ஜயசுந்தரவை பதவியிலிருந்து நீக்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோரியிருந்ததாக ஹக்கீம் இதன்போது பதில் வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad