இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகள் குறித்து ஆராய ஐவர் கொண்ட குழு நியமனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகள் குறித்து ஆராய ஐவர் கொண்ட குழு நியமனம்

(எம்.மனோசித்ரா) 

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஐவர் கொண்ட விஷேட குழுவொன்றை நியமித்துள்ளார். 

விஷேட வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த பெரேரா, றாகம மருத்துவ பீடத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரஷாந்த விஜேசிங்க, விஷேட வைத்தியர்களான அனுலா விஜேசுதந்தர, மைத்திரி சந்திரரத்ன மற்றும் தர்ஷன சிறிசேன ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, இலங்கை மருத்துவ சபை கொள்கை அடிப்படையில் நிறுவப்பட்ட சுயாதீனமான அமைப்பாகும். இதன் பிரதான பொறுப்பு நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதாகும். 

அவற்றை பாதுகாப்பதற்காக மருத்துவ கல்வியின் தரத்தை பாதுகாத்தல், வைத்தியர்களை நெறிப்படுத்தல் என்பவற்றை மருத்துவ சபை செய்து வருகிறது. மருத்துவ கட்டளைச் சட்டத்துக்கு அமைய மருத்துவ சபையின் தீர்மானங்கள் தொடர்பான இறுதி பொறுப்பு சுகாதார அமைச்சருக்கு உரித்தாகிறது. 

இந்நிலையில் மருத்துவ சபையின் செயற்பாடுகள் குறித்து பல முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அந்த முறைப்பாடுகளில் மருத்துவ சபையின் சுயாதீனத் தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் மீண்டும் அந்த அமைப்பை சுயாதீனப் படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் மருத்துவ சபைக்குள் விசாரித்து அது தொடர்பில் அறிக்கையை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அந்த கருத்துக்களை ஆராய்ந்து சுயாதீன அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சமர்பிக்கப்படும் அறிக்கைக்கு அமைய மருத்துவ சபையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தி நோயாளர்களுடைய உரிமைகளை பாதுகாத்து சிறப்பான மருத்துவ சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad