மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை இணைத்த மாதுரு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை இணைத்த மாதுரு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களை இணைத்த மாதுரு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதான மகாவலி திட்டத்தின் கீழ் நடைறைப்படுத்தும் மாதுறு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்ட விடயதானங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்தும் விஷேட கூட்டம் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை 08.09.2020 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பான திட்ட விவரங்களை மாதுறு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் நிலந்த தனபால தெளிவுபடுத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இத்திட்ட வரைவு அனுமதிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவின் பேரில்லாவெளி, முறுத்தானை, குடும்பிமலை, வடமுனை, ஊத்துச்சேனை, புணானை மேற்கு, கள்ளிச்சை போன்ற 7 கிரமங்களும் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவின் ஈரலக்குளம் பிரதேசமும் அம்பாறை மாவட்டத்தின் ஒரு கிராமமும் உள்ளடங்குகின்றன.

இத்திட்டத்தில் நெற்செய்கைக்காக 2700 ஹெக்டேயர் நிலப்பரப்பும், ஏனைய பயிர்களுக்காக 6712 ஹெக்டேயர், கால்நடை பண்ணை வளர்ப்பிற்காக 3025 ஹெக்டேயர் உட்பட மொத்தம் 17 ஆயிரத்தி 735 ஹெக்டேயர் நிலப்பரப்பு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவற்றுடன் வனப்பகுதிக்கான 26 ஆயிரத்து 417 ஹெக்டேயர் நிலப்பரப்பு உள்ளடங்கலாக 44 ஆயிரத்து 152 ஹெக்டேயர் நிலப்பரப்பு இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஏ தரத்தில் அமைந்த 24.5 கிரோ மீற்றர் நீளமான பிரதான வீதியும், 58 கிலோ மீற்றர் நீளமான சந்தை வீதிகளும் 2 பாலங்களும் அமைக்கப்படவுள்ளதுடன் விவசாயிகள், பண்ணையாளர்கள், முதலீட்டாளர்கள், முயற்சியாளர்கள் உள்ளடங்கலாக 5500 குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ளனர்.

மேலும் 10 கிராம மையங்கள், 3 குடி நீர் வசதி திட்டங்கள், 220 கிலோ மீற்றர் நீளமான காட்டு யானைக் கட்டுப்பாட்டு வேலி, 15 கி.மீ. நீளமான பிபுரத்தவ பிரதான வாய்க்கால், 83 கி.மீ. நீளமான பிரதான வாய்க்கால்களும் கிளை வாய்க்கால்களும்;, 600 கி.மீ. நீளமான விநியோக வாய்க்கால்கள் உள்ளடங்கலாக இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடங்குகின்றன. என்று தனபால விவரித்தார்.

மகாவலித் திட்டத்தின்கீழ் விவசாய மேம்பாட்டு திட்டத்தினை நோக்காகக் கொண்டு 1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக மாதுறு ஓயா நீர்த்தேக்கம் காணப்படுகின்றது.

இத்திட்டத்தின்கீழ் மாதுறு ஓயா வலது கரை அபிவிருத்தித் திட்டம் முடிவுறுத்தப்பட்டிருந்தாலும் அதன் விரிவாக்க நடவடிக்கைகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை இணைத்ததான மாதுறு ஓயா இடது கரை அபிவிருத்தித் திட்ட வேலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக தடைப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad