நீதிமன்ற உத்தரவை மீறி தியாக திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த சிவாஜி கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

நீதிமன்ற உத்தரவை மீறி தியாக திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த சிவாஜி கைது

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாகி திலீபனின் 33ஆவது நினைவுதினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படவிருந்த நிலையில், பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தடை உத்தரவை கோரி, நினைவு தினத்தை அனுஷ்டிக்க தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் உள்ள ஶ்ரீசபாரத்தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோதே, கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அப்போதைய அரசியல் பிரிவு தலைவரான லெப்டினன்ட் கேணல் தியாக தீபம் திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

எனினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட பனிரெண்டாம் நாளான செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று (15) ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், இரவோடு இரவாக நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகளை அகற்றியுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தையும் கோப்பாய் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று (14) காலை நடந்த வழக்கு விசாரணையின்போதே, இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து, திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று நீதிமன்றில் கோரியபோதிலும், தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

(யாழ்ப்பாணம் சுமித்தி தங்கராசா, மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad