தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவா? - பதிலளிக்கிறார் சீ.வீ.கே.சிவஞானம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவா? - பதிலளிக்கிறார் சீ.வீ.கே.சிவஞானம்

கூட்டமைப்புக்குள் பிளவா? – சீ.வீ.கே பதிலளிப்பு | Athavan News
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாதவண்ணம் பங்காளிக் கட்சிகளோடு இணைந்து நட்புறவோடு தமிழரசுக் கட்சி பயணிக்கும் என கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் வட மாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

பல ஊடகங்களில் நாளைய கூட்டத்தில் பிரளயங்கள், குளறுபடிகள் இடம்பெறும், முரண்பாடுகள் ஏற்படும் எனச் சொல்கிறார்கள். அப்படி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை. சில விடயங்களை நாங்கள் பேசப்போகின்றோம்.

அதாவது, தமிழரசுக் கட்சி கூட்டமைப்பினுடைய ஒரு பங்காளிக் கட்சியும் முதன்மையான கட்சியுமாகும். ஏனைய கட்சிகளை அரவணைத்து அவர்களோடு கலந்து பேசி கருத்துப் பகிர்வுடன் செயற்படவேண்டிய தேவை எங்களுக்குள்ளது.

ஆகவே, அந்தப் பொறுப்போடுதான் தமிழரசுக் கட்சி செயற்படும். என்னை பொறுத்தவரைக்கும் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்பினருக்கு சிலகருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் கூட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என நான் நம்பவில்லை.

ஆனால், அவர்களுடைய குறைபாடுகளை, கருத்துக்களை நாங்கள் அனுசரித்துப் பேசி தீர்க்கக்கூடிய வழிவகைகள் இருக்கின்றன. அதனை பேச்சுவார்த்தை மூலம் நாங்கள் செய்துகொள்வோம்.

எனவே, எங்களுடைய மத்திய செயற்குழுவாக இருந்தாலும் சரி, எந்தக் குழுவாக இருந்தாலும் சரி இணக்கப்பாட்டை நோக்கமாகக் கொண்டு இருக்குமே தவிர பிளவுகளை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டமாக இருக்காது.

இவ்வாறான செயற்பாடுகளையே எங்களுடைய தமிழரசுக் கட்சியின் எதிர்பார்ப்பாகும். தொடர்ந்து எமது கட்சி ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளுடன் நட்புறவோடும் உரிமையோடும் செயற்படும்” என்றார்.

No comments:

Post a Comment