சிகை அலங்காரிப்பு, அழகுக் கலை நிலையங்களை திறக்க சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள நிபந்தனைகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 7, 2020

சிகை அலங்காரிப்பு, அழகுக் கலை நிலையங்களை திறக்க சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள நிபந்தனைகள்

(எம்.எப்.எம்.பஸீர்) 

சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்களை மீள திறப்பதற்கான சுகாதார அமைச்சின் நிபந்தனைகள் அடங்கிய ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. 

சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை திறக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கான சாத்தியங்களை குறைக்கும் விதமான பரிந்துரைகளை முன்வைத்து அது சார்ந்த நிபந்தனைகளையும் முன்வைத்து, அவற்றை திறப்பதற்கான அனுமதியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்களை திறப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய பரிந்துரைகளின் பிரகாரம், 

'திறக்கப்படும் அழகுக் கலை நிலையங்களில் தலை முடி வெட்டுதல், தலை முடியை குறைத்தல், தலை முடிக்கு வர்ணம் சேர்த்தல், கை, கால் நகங்களுக்கு நிறப்பூச்சிடல், கை கால்களில் தேவையற்ற மயிர்களைக் கலைதல் ஆகிய சேவைகளை மட்டுமே வழங்க முடியும். 

சிகை அலங்கார நிலையங்களில், தலை முடி வெட்டும் நடவடிக்கை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். மீசை, தாடி ஆகியவற்றை சவரம் செய்வது பூரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனைவிட, சேவை வழங்குனரும், சேவை பெறுநரும் ஒன்றாக பழகும் காலம் மிகக் குறுகியதாக இருக்க வேண்டும் எனவும், ஒருவருக்கு பயன்படுத்தும் துணி உள்ளிட்டவை மற்றைய சேவை பெறுநர் தொடர்பில் பயன்படுத்த முடியாது எனவும் நிபந்தை விதிக்கப்பட்டுள்ளது. 

அழகுக் கலை நிலையங்களில் சேவை வழங்கும் போது, உதடுகளை ஸ்பரிசம் செய்யக் கூடாது. சேவை வழங்கும் அனைவரும் என் 95 ரக முகக் கவசங்களை அணிய வேண்டும். 

சேவை வழங்கும் இடங்களில் சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொலையியக்கி (ரிமோர்ட்) போன்றவற்றை வைக்கக்கூடாது என்பதுடன், சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்களின் கதவுகளை திறப்பதற்கு என தனியான சேவையாளர் ஒருவர் சேவையில் ஈடுபடுத்தல் வேண்டும். 

அனைத்து சிகையலங்கார, அழகுக் கலை நிலையங்களும் ஆரம்பிக்க முன்னரும், சேவைகள் முடிவடைந்த பின்னரும் முற்றாக தொற்று நீக்கல் செய்யப்படல் வேண்டும். 

கழிவுகளை பையொன்றில் சேகரித்து அழித்தல் வேண்டும். சேவை நிலையத்துக்கு முன்பாக கைகளை கழுவ தேவையான வசதிகள் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். சேவை நிலையத்தில் பணியாற்றும் அனைவர் குறித்த தகவல்களும் உரிமையாளரிடம் இருத்தல் வேண்டும். 

அத்துடன் நோய், அங்கவீனம் உள்ள சேவையாளர்கள் சேவையில் ஈடுபத்தல் கூடாது. சேவையாற்றுபவர்களின் உடல் உஷ்ணத்தை நாளார்ந்தம் பரீட்சித்தல் வேண்டும். 

எவ்வாறாயினும் சிகை அலங்கார நிலையங்கள், அழகுக் கலை நிலையங்கள் திறக்கப்பட முன்னர் மாகாண சுகாதார வைத்திய அதிகாரியிடம் திறப்பதற்கு அனுமதி கோரும் விண்ணப்பம் முன்வைக்கப்படல் வேண்டும். அதனை பரீட்சித்து, முன்னாயத்தங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் மட்டும், திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment