விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை - சிசிடிவி அனைத்தையும் காண்பிக்கும் படி உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை - சிசிடிவி அனைத்தையும் காண்பிக்கும் படி உத்தரவு

கொள்ளை தொடர்பான விசாரணைக்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை செய்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி, அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையான காலப்பகுதியில் ரூபா 11 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடர்களால் கொள்ளையிடப்பட்டு செல்லப்பட்டிருந்தன.

இவ்வாறு களவாடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த கொள்ளை இடம்பெற்ற வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மற்றுமொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி தொடர்பில் உரிமையாளரிடம் விசாரணைக்காக ஒத்துழைப்பினை கேட்டிருந்தனர்.

இருந்த போதிலும் குறித்த உரிமையாளர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதுடன், குறித்த களவு தொடர்பில் சிசிடிவி பதிவுகளை வழங்காது பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டார்.

இவ்வாறு பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு எதிராக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (22) அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது மன்றில் குறித்த வழக்கிற்காக ஆஜரான அவ்வீட்டு உரிமையாளரான பிரதிவாதியிடம் உடனடியாக சிசிடிவி அனைத்தையும் விசாரணைக்காக காண்பிக்கும் படியும் அதை காண்பிக்க தவறும் பட்சத்தில் வீட்டு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என பதில் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதனடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் குறித்த வீட்டில் உள்ள மறைக்காணொளிகளை (சிசிடிவி) பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர். 

மேலும் குறித்த களவு தொடர்பில் மறைக்காணொளி (சிசிடிவி) பதிவுகளை பரிசோதனை செய்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மே 27 ஆம் திகதி மன்றிற்கு அறிக்கையிடுமாறு பதில் நீதிமன்ற நீதிவான் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

No comments:

Post a Comment

Post Bottom Ad