கள்ளத்தொடர்பு, அசிட் வீச்சு விவகாரம் - இளைஞர் உள்ளிட்ட இருவர் பலி, இரு பெண்கள் காயம் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

கள்ளத்தொடர்பு, அசிட் வீச்சு விவகாரம் - இளைஞர் உள்ளிட்ட இருவர் பலி, இரு பெண்கள் காயம்

(செ.தேன்மொழி) 

கரந்தெனிய மற்றும் குளியாபிட்டிய ஆகிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ள மோதல் சம்பவங்களில் இளைஞர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன், இரு பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் மோதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. 

குளியாப்பிட்டி பகுதியில் கள்ளத் தொடர்பு விவகாரம் தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டின் காரணமாக நபரொருவர் இரு பெண்கள் மீதும் இளைஞர் ஒருவர் மீதும் அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

இதன்போது கடுமையான எரிக்காயத்துக்குள்ளான இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், பெண்கள் இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் குருணாகலை - மல்கடுவாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கரந்தெனிய - திவ்யகஹவெல பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் மின் இணைப்பொன்றை ஏற்படுத்தி வைத்துள்ளார். இந்த இணைப்பில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் வினவுவதற்காக சிலர் மின் இணைப்பை பொறுத்திய நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்தே கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் போரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad