தேசிய படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு 14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

தேசிய படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு 14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

தேசிய படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு 14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) பத்தரமுல்ல, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய படை வீரர் நினைவுத் தூபி வளாகத்தில் இடம்பெறவுள்ள தேசிய படை வீரர்கள் நினைவு தின விழாவில், இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக இப்பதவியுயர்வு வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒருமைப்பாடு, இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், உலகளாவிய தொற்றுநிலை போன்ற சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் தன்னலமற்ற தியாகங்களுக்கு மதிப்பை வழங்கும் வகையில், அவர்களை ஊக்குவிப்பதற்காகு, பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இப்பதவியுயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில், இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, இராணுவ மனித வள நிர்வாக பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் சிசிர பிலபிட்டியவின் வழிகாட்டுதலின் கீழுள்ள மனித வள நிர்வாக பணிப்பாளர் சபையினால், தேசிய படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, இராணுவ வரலாற்றில், ஒரே நாளில் வழங்கப்பட்ட அதிகளவான பதவியுயர்வாகும்.

மே மாதம் 18ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இலங்கை இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கும் இப்பதவியுயர்வு வழங்கப்படுகின்றது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதியில் கொண்டாடப்பட்ட, 70 ஆவது இராணுவ ஆண்டு நிறைவையொட்டி, தற்போதைய இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கு அமைய, 210 அதிகாரிகள் உட்பட 7,210 பேர் அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad