"சௌபாக்கியமான வீட்டுத் தோட்டம்" தேசிய வேலைத்திட்டம் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் குருநாகலில் ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 6, 2020

"சௌபாக்கியமான வீட்டுத் தோட்டம்" தேசிய வேலைத்திட்டம் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் குருநாகலில் ஆரம்பம்

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களிலும் 72 ஆயிரம் வீட்டுத் தோட்ட உரிமையாளர்களுக்கு மரக்கறி விதைகளை வீடு விடாகச் சென்று விநியோக்கிப்பதற்கு விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வேலைத்திட்டத்தின் கீழ், விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் "சௌபாக்கியமான வீட்டுத் தோட்டம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வடமேல் மாகாணத்திற்கான மரக்கறி விதைகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று குருநாகலயில் அமைந்துள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் இந்த மரக்கறி விதைகளை கொள்வனவு செய்வதாயின் சாதாரணமாக ரூபா120 விலைக்கு வாங்க வேண்டும். இதை நாங்கள் நாடு முழுவதுமாக வெறுமனே ரூபா 20 க்கு மட்டுமே விநியோகம் செய்கிறோம். கொவிட் 19 வைரஸ் பரவலுடன் முகம்கொடுத்துள்ள நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில், தாங்களுடைய வீடுகளில் இருந்து கொண்டே தேவையான உணவு வகைகளைச் செய்வதற்கான வேலைத் திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி, எமது இராணுவத்தினர், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏனைய நாடுகளை விட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் அவர்கள் செயலாற்றி வருகின்றனர் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குருநாகல் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி நயனா புத்ததாச, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி
(பானகமுவ நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad