இனவாதக் குழுக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கொரோனாவை இனவாதக் கண் கொண்டு பார்க்கவும் வேண்டாம் - பைஸர் முஸ்தபா விடுக்கும் அன்பான வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

இனவாதக் குழுக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கொரோனாவை இனவாதக் கண் கொண்டு பார்க்கவும் வேண்டாம் - பைஸர் முஸ்தபா விடுக்கும் அன்பான வேண்டுகோள்

(ஐ.ஏ. காதிர் கான்)

உயிருக்கே ஆபத்தான கொரோனா என்ற கொடிய நோயை வைத்து, சில ஊடகங்களும் அமைப்புக்களும் இனவாத நெருப்பை மூட்டத் துடிப்பதானது கண்டிக்கத்தக்க ஈனச் செயலாகும். இதில், பொறுப்புவாய்ந்த பதவிகளிலுள்ள சில அரச அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பது கவலைதரும் விடயமாகும். இந்நிலையில், கொரோனாவை வைத்து இனவாத விளையாட்டை நடாத்தி வரும் மீடியாக்கள், இனவாதக் குழுக்கள் பற்றிய தகவல்களை, உரிய இடங்கள் மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு மிக அவசரமாகக் கொண்டு செல்வது முஸ்லிம் சமூக, சமய, அரசியல் தலைமைகளின் தலையாயக் கடமையாகும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை இன்று சிலபேர், இனவாதப் பிரச்சினையாக உருவாக்கப் பார்க்கின்றனர். இது இனவாதக் கண் கொண்டு பார்க்கும் நேரமல்ல. அதற்காக, சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் தருணமுமல்ல. இக்கட்டான இத்தருணத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு அவர் விசேட பேட்டி வழங்கியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பேட்டியில் அவர் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். காொரோனாவை வைத்து மூட்டப்பட்டு வரும் இனவாத் தீயானது, கொரோனாவை விட பாரிய ஆபத்தில் போய் முடியலாம் போல் தெரிகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதில் உடனடிக் கவனம் செலுத்துவது சமூகத் தலைமைகளின் பாரிய பொறுப்பாகும்.

பெரும்பான்மைச் சமூகத்தின் மிகவும் பிரபல்யமான சோஷியல் மீடியாக்களும், இனவாத ஊடகங்கள் சிலவும் மற்றும் பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமுள்ள பல்வேறு சமூக வலைத்தளங்களும் கொரோனாவை வைத்து மிகப் பாரிய அளவிலான இனவாதத்தையும், இஸ்லாம் பற்றிய வெறுப்புப் பதிவுகளையும் நன்றாகத் திட்டமிட்டு பரப்பி வருவதையும், தங்கள் பங்குகளுக்கு எரிகிற இந்த நெருப்பில் எண்ணெய் வார்த்துக் கொண்டிருப்பதையும் அறிகிறோம். 

ஊரடங்குச் சட்டத்தை மதிக்காமல் இருந்ததிலும், தனிமைப்படுத்திக் கொள்வதில் அசட்டைத்தனம் செய்ததிலும் முஸ்லிம்கள் மாத்திரமே தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது போன்றதொரு பிம்பம் மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.

குறித்த இனவாதக் காய் நகர்த்தல்களை அவதானிக்கின்ற போது "இலங்கையில் குறித்த நோய்ப் பரவல் உண்டானதற்கு இலங்கை முஸ்லிம்களே காரணமாக இருந்தனர்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இனவாதத் தீயானது, அதன் கொதி நிலையை அடைகின்ற போது அது நல்ல, தீய, சந்தோஷமான, கவலையான, ஆபத்தான சகல தருணங்களிலும் தனது நோக்கத்தை அடைந்து கொள்ள தருணம் பார்த்துக் கொண்டே இருக்கும் என்ற யதார்த்தம் எமது சமூகத்தால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை.

ஆகவேதான், இனவாதிகளுக்கு தீனி போடுவதில் எமது சமூகத்தைச் சார்ந்த பலரும், தம்மை அறிந்தோ, அறியாமலோ பல்வேறு சந்தர்பங்களில், காரணமாக அமைந்து விடுகின்றனர். 

எமது சமூகத்தில் ஏதேனும் தவறுகள் இடம்பெறுகின்ற போது, தவறுகள் இடம்பெற்றுள்ளதாக யாரேனும் செய்திகளைப் பரப்பி விடுகின்ற போது நாமும் அவற்றை சமூக ஊடகங்கள் மூலமாகப் பரப்பி விடுவதை முற்றாகத் தவிர்ப்போம்.

அவ்வாறன செய்திளை வைத்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாதிகள் கதை கட்டுகின்றனர், சிறியவற்றை ஊதிப் பெரிதாக்கி இனவாதத்தை வளர்க்கின்றனர் என்பதை எமது சமூகம் இன்னும் உணர்ந்து கொள்வதாக இல்லை.

சமூக சீர்த் திருத்தங்களை விரும்புகின்றவர்கள், தவறுகளை சமூக ஊடகங்களில் ஏற்றி நாரடிக்கும் துரோகச் செயலைச் செய்யாது ஊர் தலைமைகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பதே அறிவார்ந்த செயற்பாடாகும். அவ்வாறு செய்வதன் மூலம் மாத்திரமே தவறுகள் கலையப்படலாம். 

சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை வீணடித்து வருபவர்களே, பெரும்பாலும் புரளிகள் பரப்பப் படுவதற்கும் சமூகம் காட்டிக் கொடுக்கப்படுவதற்கும் காரணமாக அமைகின்றனர். நமது நாட்டைப் பொறுத்தவரை கட்டுக்கடங்காத நிலைமை ஏற்படுகின்றபோது, அந்தப் பழியை ஒரு சமூகத்தின் மீது சாட்டுவது வாடிக்கையானது. 

இவ்வாறானதொரு நிலைமையில் அற்கான முயற்சிகள் தற்போது மெதுவாக நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் கொரோனா பரவுவது முஸ்லிம்களினால் தான் என்றதொரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று சந்தேகிக்கப்பட்டவர்களைக் கூட தீண்டத்தகாதவர்கள் போல, குற்றவாளிகள் போல பார்க்கும் நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. அதையும் விட, இந்த நோயினால் இறந்துவிட்டால் எனது உடலை எரித்து விடுவார்களோ என்ற அச்சம் சமூக மட்டத்தில் மேலோங்கியிருக்கிறது. 

இன்றைய காலகட்டத்தில், பொதுமக்கள் யாராவது ஏதாவது ஒரு காரணத்திற்காக வைத்தியரிடமோ அல்லது வைத்தியசாலைகளுக்கோ செல்லும்போது, அவருடைய சரியான தகவல்களைக் கட்டாயம் மறைக்காமல் வைத்தியர்களிடம் எத்தி வைக்கவும். இது பின்னர் நிறைய பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். 

எனவே, எப்போதும் தனித்திருப்போம். புத்தி சாதுர்யமாக செயற்படுவோம். அதில் வெற்றி பெறுவோம். நம்மைப்பற்றி பின்னப்படும் சதி வேலைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவோம். நம்மீது விரல் நீட்டப்படும் முன், நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment