அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸ் பிரிவின் எந்தகல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 05ஆம் திகதி மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 1.2 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியதுடன் சந்தேகநபர்கள் இருவரை வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபரான 54 வயதுடைய நபரும், 22 வயதுடைய அவருடைய மகனுமே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மிக நீண்ட நாட்களாக போதைப்பொருள் வியாபாரத்தினை பாரிய அளவில் செய்து வந்துள்ளமை மேலதிக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்தது.
இதற்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் (NPP) பேலியகொட நகர சபையின் உறுப்பினராக இருப்பது பின்னர் தெரியவந்தது.
மேலும், குறித்த அதிபரின் மகனும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டமை காரணமாக, கைது செய்யப்பட்ட அதிபரை அவரது பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்ய வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்திருந்தார்.
இதற்கிடையில், கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் சிக்கியதன் காரணமாக, பேலியகொட நகர சபை உறுப்பினரான தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment